பழிக்குப்பழியாக நடந்த ரவுடியின் படுகொலை - நெல்லையில் பயங்கரம்
திருநெல்வேலி அருகே பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த பாளையஞ் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு என்பவரது மகன் வைகுண்டத்திற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
வைகுண்டம் மீது திருநெல்வேலி மாநகர், பாளையங்கோட்டை காவல் நிலையம், திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலையம் ஆகியவற்றில் ஐந்து கொலை வழக்கு உட்பட10க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது .
இதனால் எதிர் தரப்பினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என எண்ணிய வைகுண்டம் தனது சொந்த கிராமத்தில் இல்லாமல் நகர் பகுதியில் வசித்து வந்தார். இதனிடையே நேற்று சொந்த கிராமத்திற்கு சென்ற அவர் அருகில் உள்ள பாளையம் கால்வாயில் குளித்துள்ளார்.
அப்போது வைகுண்டத்தை 5 இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி ஜெயராஜ் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வைகுண்டத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜோசப் குடும்பத்திற்கும் முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வைகுண்டத்திற்கு தொடர்பு இருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தில் ஆண்களே இல்லாத நிலையில் பெண் வாரிசு ஒருவரின் மகன் பழிக்குப்பழியாக இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பழிக்கு பழியாக ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.