இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய வழக்கறிஞர் கைது - என்ன நடந்தது?
திருநெல்வேலியில் இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை, பணகுடி வடக்கு தெருவை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தவறான எண்ணத்துடன் கிண்டலடித்து வந்துள்ளார்.
கடந்த 20.09.2021ம் தேதி அன்று அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் சத்தம் போடவும், அவருக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். பின்னர் அப்பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தன்னிடம் தவறாக நடக்க முயன்று, வாட்ஸ் அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்த செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் அந்த பெண் மனு அளித்தார்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு உத்தரவிட்டதன் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையிலான போலீசார் வழக்கறிஞர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.