கவின் விவகாரத்தில் 27ஆம் தேதி நடந்தது என்ன? காதலி சுபாஷினி விளக்கம்
கவின் விவகாரம் குறித்து அவரது காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கவின் கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27 ஆம் தேதி திருநெல்வேலியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கவினின் காதலி சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், தானே கொலை செய்ததாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
துணை ஆய்வாளர்களான சுபாஷினியின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சுபாஷினியின் பெற்றோரையும் கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என கூறி, கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அவரது சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
காதலி சுபாஷினி விளக்கம்
இந்நிலையில், தனது பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மந்தம் இல்லை என கூறி கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் பேசிய அவர், "நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். கவின் காதலை வீட்டில் தெரிவிக்க 6 மாதம் அவகாசம் கேட்டிருந்தான். அதனால் நான் என் அப்பா கேட்ட போது, யாரையும் காதலிக்கவில்லை என கூறினேன்.
இதன் பிறகு பொண்ணு கேட்க வருமாறு, சுர்ஜித் கவினை அழைத்தான். மே 27 கவின் வருவது எனக்கு தெரியாது. 28 தான் நான் வர சொல்லி இருந்தேன். கவின் வந்த போது, நான் அவர்களின் அம்மா மற்றும் மாமாவுடன் பேசி கொண்டிருந்தேன்.
அவன் வெளிய கிளம்பிட்டான். அதன் பிறகு அவங்க கிளம்பும் போது கவின் எங்கே என யோசித்தோம். அவங்க அம்மாவும் கால் பண்ணாங்க. எடுக்கல அவன். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு.
எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்பது பற்றி எங்கள் இருவருக்கும் தான் தெரியும். எங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் பேச வேண்டாம். எங்கள் அப்பா அம்மாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அவர்களை தண்டிக்க வேண்டும் என நினைப்பது தவறு. அவர்களை விட்டுவிடுங்கள். இந்த சூழலில் என்னுடைய உணர்வுகளுக்கும், நான் என்ன நினைக்கிறேன் என்பதற்கும் மதிப்பளியுங்கள்" என தெரிவித்துள்ளார்.