பொதுமக்கள் அமைதியாக வாழும் சூழலை உருவாக்குவோம்: நெல்லை காவல்துறை புதிய ஆணையர் உறுதி
திருநெல்வேலியில் பொதுமக்கள் அமைதியாக வாழும் சூழலை உருவாக்குவோம் என்று மாநகர காவல்துறை புதிய ஆணையர் என்.கே. செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி காவல்துறை ஆணையராக இருந்த அன்பு கடந்த வாரம் தென்மண்டல ஐஜியாக மாற்றப்பட்டார். இதையடுத்து புதிய காவல்துறை ஆணையராக சென்னையில் அமலாக்கத்துறை ஐஜியாக இருந்த செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டார்.
இன்றுபொறுப்பேற்றுக்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கெனவே பணிபுரிந்துள்ளதால் இங்குள்ள பிரச்சினைகள் குறித்து தெரியும் என்றும், தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்துவோம் என்றும் கூறினார்.
மேலும் நெல்லை மாநகரில் பொதுமக்கள் அமைதியாக வாழும் சூழலை உருவாக்குவோம். எந்த பிரச்சினையானாலும் காவல்துறை நடுநிலையுடன் செயல்படும் என்றும் செந்தாமரை கண்ணன் கூறினார்.