'பிக் பிரதர்' என்ற மனப்பான்மையுடன் கூட்டணிக் கட்சிகளுடன் தி.மு.க. செயல்படவில்லை - கே.என்.நேரு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தி.மு.க. தலைமை மும்முரமாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
கே.என்.நேரு பேசியதாவது - "இன்னும் இரண்டு அல்லது மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும் என்பது பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
தனிச் சின்னம் தொடர்பான விவகாரம் எங்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் உள்ள பிரச்சனை அதுதான். கூட்டணிக் கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் எந்த அதிருப்தியும் கிடையாது. புதுச் சின்னத்தில் ஓட்டு வாங்குவது சிரமம், அதனால் தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்கிறோம்.

இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் முற்றிலும் தவறானது. உதயநிதி போட்டியிடுவது பற்றி மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். 'பிக் பிரதர்' என்ற மனப்பான்மையுடன் கூட்டணிக் கட்சிகளுடன் தி.மு.க. செயல்படவில்லை. தேர்தலுக்காகவே வன்னியர் உள் ஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது.
ராமர் கோயில் கட்ட மஸ்தான் நிதி அளித்தது மத நல்லிணக்க அடிப்படையில்தான். வேல் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் முருகக் கடவுளை வணங்குபவர்கள் என்று அர்த்தமா?"
இவ்வாறு அவர் பேசினார்.