பணப்படுவாடா குற்றச்சாட்டில் சிக்கிய கே.என்.நேரு - திருச்சி தெற்கில் தேர்தல் நடக்குமா?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 5 நாட்களே உள்ளது. தேர்தலையொட்டி தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காவலர்களும் ஈடுபட இருப்பதால், அவர்களுக்கான தபால் வாக்குகள் இன்று முதல் பெறப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திருச்சி தெற்கு தொகுதிக்குட்பட்ட தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு திமுகவின் முதன்மை செயலர் கே.என். நேரு ரகசியமாக கவர்களில் பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேர்தல் அதிகாரி நடத்திய சோதனையில் பணக்கவர்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் நடத்திய விசாரணையில் கே.என். நேரு மீதான குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என கே.என். நேரு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த கே.என். நேருவை தேர்தலில் போட்டுயிட தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் அதிமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து, பணப்பட்டுவாடா விவகாரத்தில் தொடர்புடைய தில்லை நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எழுத்தர் சுகந்தி, அரசு மருத்துவமனை காவல்நிலைய எஸ்.ஐ. மாதரசி ஸ்டெல்லா மேரி, சிறப்பு எஸ்.ஐ. பாலாஜி, நுண்ணறிவு பிரிவு சிறப்பு எஸ்.ஐகள் சங்கரன், கலியமூர்த்தி உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்ய ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், சிபிசிஐடி குழுவினர் திருச்சியில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அப்போது, காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக திமுக வேட்பாளர் கே.என். நேரு மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையமும் பரிந்துரை செய்துள்ளது.
இதனால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கே.என். நேரு மீதான குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் திருச்சி தெற்கு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.