'' நீட் விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை '' - கொந்தளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MKStalin NEET TNAssembly AmitShah
By Irumporai Jan 06, 2022 06:51 AM GMT
Report

நீட் தொடர்பாக வருகின்ற ஜனவரி 8 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.

அதே சமயம், தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி நேரம் நேரலையில்  ஒளிபரப்பப்பட்டது.

இன்றைய நிகழ்வில்  நீட் தேர்வு தொடர்பாக பேசிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை.

இது தொடர்பான மசோதா பற்றிய கடிதம் அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என்றும்,போராட்டத்தின் மூலமே அனைத்து உரிமைகளும் பெற்றிருப்பதால் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்  நீட் தேர்வுக்கு எதிரான அரசியல், சட்ட, மக்கள் போராட்டம் தொடரும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.