நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு அவசியம்
நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என வெளியான தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
அந்தவகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு எப்போது வெளியாகும்? என்று மாணவ-மாணவிகள் அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ‘எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ். மற்றும் பி.எச்.எம்.எஸ். போன்ற மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி நடைபெறும்.
மேலும், மத்திய-மாநில அரசுகளின் பிற நிறுவனங்கள் விதிமுறைகள், வழிகாட்டுதல்களின் படி பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கும், பி.எஸ்.சி. வாழ்வியல் அறிவியல் படிப்புக்கும் நீட் தேர்வு மதிப்பெண்ணை பயன்படுத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம்' என்று தெரிவித்துள்ளது.