கொரோனா பேய் இருக்கும் போது, நீட் எமனை திணிப்பது இரக்கமற்ற செயல் - கௌதமன் கண்டனம்!
கொரோனா பேய் கொடூரமாகக் காத்திருக்க 'நீட்' எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல் என ஒன்றிய அரசுக்கு தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் கௌதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழரை கோடித் தமிழ் மக்களின் மதிப்புமிக்க மக்கள் சபையான தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் இயற்றிய பிறகும், எங்கள் தமிழ்ப் பிள்ளைகள் 13 பேர் 'நீட்' என்கிற எமனை எதிர்த்துத் தங்கள் உயிரால் உயில் எழுதித் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்ட பின்பும், கொரோனா என்கிற ஒரு கொடும் பேய் கொத்துக்கொத்தாக மனித உயிர்களை வேட்டையாடியதோடு மூன்றாவது அலைக்காக வெறிகொண்டு காத்திருக்கும் இச்சூழலில் நீட் தேர்வை இரக்கமற்ற முறையில் நடத்தத் துடிக்கும் இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீட்டினை எதிர்த்து அனைத்துக் கல்லூரி மாணவர்களோடு எத்தனையெத்தனையோ போராட்டங்களை நடத்தினோம். சென்னையில் பிரம்மாண்டமாக மாநாடு நடத்தி நீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தோம் என்று கூறியுள்ளார்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட்டினை அடியோடு ஒழிப்போம் என்று எங்களிடம் நேரில் வாக்குறுதி அளித்தார் என்றும் அன்று ஆண்ட அ.தி.மு.க., அரசு எங்களைப் பச்சையாக ஏமாற்றி எங்கள் வீட்டு 13 பிள்ளைகளின் உயிரை காவு வாங்கிவிட்டது.
இப்போது ஆளும் தி.மு.க., அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போன்று வருகிற கூட்டத்தொடரிலேயே நீட்டை நிரந்தரமாகத் தூக்கியெறியும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.