”நீட் தேர்வு ரத்து, சிஏஏ வாபஸ்” தேர்தல் அறிக்கையால் மோதிக்கொள்ளும் அதிமுக, பாஜக?

exam bjp aiadmk neet
By Jon Mar 16, 2021 02:12 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டன. வேட்பாளர் அறிவிப்பிலும் தேர்தல் அறிக்கைகளிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளது. திமுக, அதிமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளும் தங்களுடைய அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் பொதுவாக இடம்பெற்றுள்ளது நீட் தேர்வு ரத்து. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது.

மேலும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, ”குடியுரிமை சட்டம் குறித்து அதிமுக குழப்பத்தில் உள்ளது. ஆகையால், நாங்கள் குடியுரிமை சட்டத்தின் சிறப்பு குறித்து அதிமுகவினருக்கு விளக்கி சொல்லி, அறிக்கையில் இருந்து வாபஸ் பெற வலியுறுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேசிய மீன்வளத்துத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ”தேர்தல் அறிக்கையை பொறுத்தளவில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, குடியுரிமை சட்டம் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் தேவையில்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்பதை தேர்தல் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அந்த ஒருமித்த நிலைப்பாட்டை தான் மீண்டும் அதிமுக அரசு அமையும் போது, நிச்சயமாக குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார். ”மேலும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி அவருடைய கருத்தை சொல்லிவுள்ளார். எங்களின் கருத்தை நாங்கள் சொல்லியிருக்கிறோம். எங்களின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.