நீட் தேர்வு விவகாரம் : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதில் செய்யப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுகிறது.
இளநிலை மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்.19-ம் தேதி சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாமலேயே வைத்துள்ளார். இதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டு தரப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் தலைமை செயலகத்தில் கூடுகிறது. இதில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் குழு தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவது குறித்தும், எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு நீட் தேர்வு குறித்த அவசியத்தை பேசுவார் என்று அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.