மாணவர் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்: அடுத்த நடவடிக்கை என்ன?
சேலம் அருகே நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கூழையுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தனுஷ் என்பவர், ஏற்கனவே இரண்டுமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்று வேதனை தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டம் தொடர்கிறது என்றும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற நாளை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் சேலத்தில் உள்ள தனுஷின் உடலுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.