“பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” - மாணவி நந்தினி மனு!

BJP Chennai High Court NEET
By Thahir Jul 02, 2021 06:51 AM GMT
Report

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிராக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஐகோர்ட்டில் மாணவி நந்தினி மனு தாக்கல் செய்துள்ளார்.

“பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” - மாணவி நந்தினி மனு! | Neet Chennai High Court

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை இந்த குழுவிடம் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக மாநில அரசு செயல்பட முடியாது என்றும் மத்திய அரசை எதிர்க்கும் வகையில் தமிழக அரசு அமைத்துள்ள குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த நிலையில், கரு.நாகராஜன் வழக்கை எதிர்த்து நந்தினி என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மாணவர்களின் பிரச்னைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை. மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு இந்த குழுவை அமைத்துள்ளது. எனவே கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியுள்ளார். பாஜக கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரிக்கப்பட உள்ள நிலையில் அதனுடன் சேர்த்து மாணவியின் வழக்கை நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.