பாஜகவின் "திசை திருப்பும் " தந்திரத்தை முறியடிப்பீர்...தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!
பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முக ஸ்டாலின் அறிக்கை
தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக அரசின் ஊழல்கள், வெறுப்பு அரசியலின் தீமைகளை பற்றி பரப்புரை செய்ய வேண்டும் என கட்சி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டு, சனாதன விவகாரத்தில் திசை திருப்பும் செயலில் பாஜக ஈடுபடுகிறது என குற்றம்சாட்டினார்.
இமாலய ஊழல் முகத்தை மறைக்க சனாதன போர்வையை போர்த்திக் கொள்ள பார்க்கிறது பாஜக என குற்றம்சாட்டி இருக்கும் முதல்வர், ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, சர்வாதிகார ஒற்றை ஆட்சி என்ற ஆபத்தான பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்கிறார்கள் என சாடியிருக்கிறார்.
கவன சிதறலே இருக்கக்கூடாது
நாளும் வெறுப்பரசியலை ஊக்குவித்து, இந்தியத் திருநாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ள முதல்வர் முக ஸ்டாலின், நாட்டில் பற்றி எரியும் எந்தப் பிரச்சினைக்கும் வாய்திறக்காத பிரதமர், ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி 'சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்' என்று ஒன்றிய அமைச்சர்கள் அனைவருக்கும் உத்தரவு போடுகிறார் என்றால், அதன் மூலமாக குளிர்காய நினைக்கிறார் என்றே பொருள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது, ஆட்சிகளைக் கவிழ்ப்பது, ஒற்றை ஆட்சி என சர்வாதிகாரப் பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்வது என்பது உள்ளிட்ட ஆபத்தான முயற்சிகளைப் பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என தொண்டர்களிடம் தெரிவித்து கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற இலக்கில் வெல்ல எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.