நீட் விலக்கு மசோதா விவகாரம் விரைவில் கூடுகிறது தமிழக சட்டமன்றம் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
சட்டசபை கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு,
குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடியரசுத்தலைவருக்கு அதனை அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரு தினங்களுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் கட்சிகள் தவிர 10 கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம்தான் தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய அவர், 2006ம் ஆண்டு டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது.
நுழைவு தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசியலமைப்பு சட்டப்படி செல்லும் என 2006ல் ஒன்றிய அரசு தெரிவித்தது.
நுழைவுத் தேர்வை ஒழிக்கும் சட்டத்துக்கு 2006ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார் என்று குறிப்பிட்டார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.