அவசியம் வாக்களியுங்கள்...வெற்றிலைப்பாக்குடன் அழைப்பு விடுத்த தேர்தல் அலுவலர்கள்
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் 100 சதவீத வாக்குகளை செலுத்த மக்களுக்கு நூதன முறையில் அழைப்பு விடுத்த தேர்தல் அலுவலர்களின் செயல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில். பல்வேறு காட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் பிரச்சாரம் என முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் 100 சதவீத வாக்குகளை பதிவு செய்யுமாறு அந்த தொகுதியின் தேர்தல் அலுவலர்கள் மக்களிடம் வெற்றிலை மற்றும் பாக்கு வைத்து திருமணத்துக்கு அழைப்பு விடுப்பது போல வாக்களிக்க அழைப்பு விடுத்து சென்றனர். மேலும் அவர்கள் கொடுத்த அழைப்பு சீட்டில் "தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இத்தேர்தலில், 18 வயது பூர்த்தியான, தகுதியான வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்கு அளிக்க வேண்டும்.
வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்தும், அருகில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும்’’ என அந்த அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
அப்போது திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்குவதுபோல் வெற்றிலை, பாக்கு வைத்து நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.