தோளில் சாய்ந்தபடி உயிரை விட்ட கொரில்லா: நெஞ்சை உருக்கும் சோகம்
உலகப் புகழ்பெற்ற நடாகாஷி கொரில்லா குரங்கு தனது பாதுகாவலரின் தோளில் சாய்ந்தபடி உயிரைவிட்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
இங்கு நடாகாஷி மற்றும் மடாபிஷி ஆகிய இரண்டு கொரில்லாக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.
கடந்த 2019ம் ஆண்டு, விருங்கா உயிரியல் பூங்காவின் வனத்துறை ஊழியரான மேத்யூ ஷவாமு இந்த இரு கொரில்லாக்களுடன் செல்பி எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்த புகைப்படம் வைரலாக, கொரில்லாக்கள் உலகப்புகழ் பெற்றன, இந்நிலையில் தற்போது நடாகாஷி என்ற மனித கொரில்லா உயிரிழந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு காணப்பட்ட நடாகாஷி, தனது பாதுகாவலர் ஆண்ட்ரே பவுமா தோளில் சாய்ந்தபடி உயிரை விட்டது.
நடாகாஷி கொரில்லா உயிரியல் பூங்காவுக்கு வந்ததில் இருந்து அதனை தனது குழந்தையைபோல் பராமரித்து வந்தவர் ஆண்ட்ரே பவுமா என்பது குறிப்பிடத்தக்கது.