ரம்ஜான் அவர்கள் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி நம் பண்டிகை - புத்தகத்தில் இடம்பெற்றதால் சர்ச்சை: என்ன நடந்தது?
NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு-வின் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ரம்ஜான் பண்டிகை தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு-வின் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ரம்ஜான் பண்டிகை தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு தேசிய அளவிலான பாடத்திட்டத்தினை வரையறை செய்கிறது.

இந்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு வரையறை செய்யும் பாடத்திட்டம் தொடர்பாக அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுவது உண்டு. அந்த வகையில், சமீபத்தில் எட்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில், திருவள்ளுவரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இதில், திருவள்ளுவர் காவி உடை அணிந்து, தலையில் முடியில்லாமல் மழித்து குடுமியுடன், நெற்றியில் திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை அணிந்திருப்பதுபோல படம் இடம்பெற்றிருக்கிறது.
திருவள்ளுவரின் இந்த உருவப் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு தமிழகத்தில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன ஏனெனில் வேணுகோபால் சர்மாவால் வரையப்பட்ட வெண்ணிற ஆடையில், தலையில் கொண்டை, தாடியுடன் ஒரு கையில் எழுத்தாணி மற்றொரு கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கும் படமே தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரின் ஓவியம் ஆகும்.
இதேபோல் இதற்கு முன்னர் சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ‘சாதி முரண்பாடு ஆடை விவகாரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன. இதற்கு நாடார் சமுதாயம் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
பின்னர் நாடார் சமுதாயம் சம்பந்தப்பட்ட அந்த தகவல்கள் நீக்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் ரம்ஜான் மற்றும் வினாயகர் சதுர்த்தி தொடர்பாக இடம்பெற்றுள்ள பாடத்தில், ரம்ஜான் பண்டிகையின் போது அவர்கள் மசூதிகளில் தொழுகை நடத்துவார்கள் பின்னர் இனிப்புகளை உண்பார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அதற்குக் கீழே விநாயகர் சதுர்த்தி தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தியில் நாம் கடவுள் விநாயகரின் பிறந்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம் என்று இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரம் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை அவர்களின் பண்டிகை என்றும் இந்துக்கள் விநாயக சதுர்த்தியை நமது பண்டிகை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பும் ஆட்சியேபனையும் தெரிவித்துள்ளனர். ஏனெனில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே தாரக மந்திரமாகக் கொண்ட இந்தியாவில் சிறுவர்களின் பாடபுத்தகத்தில் பிரிவினை எண்ணத்தைத் தூண்டும் வகையில் நித்திய கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.