நயன்தாரா பற்றி பேசிய ராதாரவியை நீக்கிய திமுக ஆ.ராசா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி கேள்வி!
நயன்தாராவை பற்றி பேசியவரை கட்சியிலிருந்து நீக்கிய திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவை ஏன் இன்னும் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அரியலூர் தொகுதியில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு ஆதரவாக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. சமூக நீதியின் அடிப்படையில் உருவான கூட்டணி இது. 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி முதலமைச்சராக நமக்கு வந்திருக்கிறார். அவர் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும்.

தி.மு.க. எம்பி ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின்போது முதலமைச்சரையும், அவரது தாயாரையும் கொச்சையாக பேசியிருக்கிறார். அவரை மன்னிக்க முடியாது. இதுவே நம்ம கட்சியில யாராவது இப்படி பேசியிருந்தால் இந்நேரம் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்து உதைத்து அனுப்பி இருப்போம். தாயைப் பற்றி கொச்சையாக பேசுபவன் மனிதனே கிடையாது.
இது தமிழ்நாட்டுப் பெண்களின் மானப் பிரச்சினையாகும். தமிழக பெண்கள் அனைவரும் தி.மு.க.வை புறக்கணிக்க வேண்டும்.

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்த போது, அவர் நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசினார். அப்போது உடனடியாக அவரை அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார்கள்.
ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து பேசிய ஆ.ராசாவை ஏன் இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை. அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேசினார்.