பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்தார் நவ்ஜோத் சிங் சித்து!
முன்னாள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவர் இன்று சரணடைந்தார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமாக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் கடந்த 1988-ம் ஆண்டு பாட்டியாலா பகுதியில் வேகமாக காரை ஓட்டி சென்று விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பல அப்பீல்களுக்கு பின்னர் 34 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்ரம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
அதன்படி இந்த விசாரணையின் முடிவில் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

தீர்ப்பு குறித்து பேசிய நவ்ஜோத் சிங் சித்து சட்டத்திற்குட்பட்டு நடப்பேன் என தெரிவித்தார். இந்த உத்தரவை அடுத்து சித்து விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்த்த நிலையில் அவர் தற்போது சரணடைந்துள்ளார்.
உடல் நல காரணங்களுக்காக சரணடைய சில வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவருடைய கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, பாட்டியாலா அமர்வு நீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்துள்ளார்.