உக்ரைன் போரில் இந்திய மாணவர் நவீன் கொல்லப்பட்டது எப்படி? - வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைன் போரில் ரஷ்யா ஏவிய ராக்கெட் குண்டு தாக்கியதில் இந்திய மாணவர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக இதற்கான பணிகளில் இருந்த போது ங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 6வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
ரஷ்யா உக்ரைன் நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்திய நிலையில் உக்ரைன் பொதுமக்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷ்ய வீரர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
இதனிடையே இன்று காலை கார்கிவ் நகரில் ரஷ்யாவின் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.கர்நாடக மாநிலம் ஹாவேரி பகுதியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா கார்கீவ் தேசிய மெடிக்கல் யுனிவர்சிட்டியில் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
அங்கு ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருவதால் இந்திய மாணவர்கள் பக்கத்து மாநில எல்லைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் கார்கீவ் நகரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அருகிலுள்ள கட்டிடத்திற்கு அடியில் இந்திய மாணவர் நவீன் உள்பட சிலர் பதுங்கியிருந்துள்ளனர். உணவு மற்றும் கைச்செலவுக்கு பணம் எடுக்க வெளியில் சென்ற நவீன் மளிகை கடையில் பொருட்கள் வாங்க செல்வதாக தனது அப்பாவிடம் நவீன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
கடையில் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருந்தபோது ரஷ்ய வீரர்கள் ஏவிய ராக்கெட் குண்டு அந்த பகுதியில் விழுந்து வெடிக்க நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் இன்று காலை கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.