உக்ரைன் எல்லையில் களமிறங்கியது நேட்டோவின் சிறப்பு படை - ரஷ்யாவுக்கு ஆப்பு
ரஷ்யா உக்ரைனில் போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சிறப்பு படையை முதல் முறையாக நேட்டோ களமிறக்கியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதாவது உக்ரைனுடன் எல்லையை பகிர்ந்துள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளான போலாந்து, ஸ்லொவாகியா, ஹங்கேரி, ரூமெனியா ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு எதிரொலி இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதனால் தரைப்படை, விமானப்படை, கடற்படை என நேட்டோ அமைப்பின் சிறப்பு படை கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகளின் எல்லைகளில் உடனடியாக நிலைநிறுத்தப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார்.
சிறப்பு படையின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரம் வீரர்கள் ஆகும். அதேபோல் நேட்டோ அமைப்பின் வரலாற்றில் சிறப்பு படை களமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.