தேசிய கல்விக் கொள்கை, உலகை இந்தியா வழிநடத்த உதவும் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரது கனவை நனவாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, உலகை இந்தியா வழிநடத்த உதவும் என்று பேசியிருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து மாணவ- மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
“நாட்டின் சுதந்திரத்துக்காக எண்ணிலடங்காதோர் பல்வேறு வகைகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள் சொல்லில் அடங்காதவை.
பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தற்போது வரையிலும்கூட அடையாளம் காணப்படவில்லை என்பது துரதிஷ்டவசமானது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஓர் ஆய்வை நடத்தி, நம் நாட்டுக்கு அவர்களது பங்களிப்பின் விவரங்களை அழியாத வகையில் பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
தியாகிகளையும், மாவீரர்களையும் மறக்கும் தேசம் நன்றி கெட்டதுடன் மட்டுமின்றி, இருண்ட எதிர்காலத்தை கொண்டுள்ளது என்றும் கூறலாம்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதன் 80-க்கும் அதிகமான மையங்கள் மற்றும் 160-க்கும் அதிகமான இணைப்புக் கல்லூரிகள் மூலம் தமிழ்நாட்டின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்கிறது.
இதன்மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ மாணவர்கள் 2.80 லட்சம் பேர் பல்வேறு கற்றல் திட்டங்களைத் தொடர்கின்றனர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்புத் துறைகளைக் கொண்டு கற்பித்தல் பணியுடன், ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பேராசிரியர்கள் பலரும் பல்வேறு விருதுகளை பெற்றவர்கள். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரது கனவை நனைவாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது, உலகை இந்தியா வழிநடத்த உதவும். இந்தியாவை சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவுச் சமூகமாக மாற்றுவதற்கு உதவும். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் உயர் தர கல்வியை வழங்க உறுதியேற்க வேண்டும்.
தற்போதைய கல்வி அமைப்பில் உள்ள தடைகளை அகற்ற தேசிய கல்விக் கொள்கை உதவி புரியும். இதில், கற்றல் முடிவுகளை எடுத்தல், துறைகளைப் பிரித்தல், வரையறுக்கப்பட்ட அணுகுமுறை, குறிப்பாக சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர் மற்றும் நிறுவன சுயாட்சிக்கு கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன“ என பேசினார்.