எங்கள் வரலாறு தெரியாமல்..? தேசிய விருதுக் குழுவிற்கு முதல்வர் கண்டனம்!
தேசிய விருது குழுவிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது
இந்திய அளவில் திரைத்துறையின் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை ஹரிஷ் கல்யாண் - எம்.எஸ்.பாஸ்கர் கூட்டணியில் வெளியான பார்க்கிங் படம் வென்றது. இந்தப் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர் வென்றார். மேலும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்தது.
தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு அறிவிக்கப்பட்டது. தமிழில் வெளியான லிட்டில் விங்ஸ் குறும்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்தது. அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம், ஷாருக் கானுக்கு முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
அதேபோல் ஷாருக் கானுடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதை 12th Fail படத்தின் நாயகன் விக்ராந்த் மாஸி பகிர்ந்து கொள்கிறார். ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமாரின் வாழ்க்கையை தழுவி உருவான 12th fail படம் சிறந்த திரைப்படமாகவும் தேர்வாகியுள்ளது.
முதல்வர் கண்டனம்
ஊர்வசி, பூ பட நடிகை பார்வதி நடிப்பில் பெண்களை மையமாக வைத்து உருவான உள்ளொழுக்கு (Ullozhukku) சிறந்த மலையாள திரைப்படமாக தேர்வானது. ஊர்வசி சிறந்த துணை நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், "தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரள மாநிலத்தின் நன்மதிப்பு கெடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது. வகுப்புவாத பிரிவை விதைக்கும் எண்ணத்தில் அந்தப் படத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டது.
அப்படிப்பட்ட ஒரு படத்திற்கு தேசிய விருது வழங்கியுள்ளனர். இது சங்பரிவாரின் பிளவுப்படுத்தும் அரசியல் நிலைப்பாட்டையே காட்டுகிறது. சங்பரிவார் சித்தாந்தத்தில் ஆழமாக வேரூன்றி எடுக்கப்பட்ட படத்திற்கு தேசியளவிலான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை விருதுக்குழு வழங்கியுள்ளது.
கேரளா வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் மாநிலமாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தை இதன் மூலம் அவமதிப்பு செய்திருக்கிறார்கள். கேரளா மக்கள் மட்டுமல்லாமல், ஜனநாயகம் மற்றும் நம் நாட்டின் அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.
சங்கபரிவார் சினிமாவை ஆயுதமாக ஏந்தி அதன் மூலம் வகுப்புவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வகுப்புவாத அரசியலை முன்னிறுத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஒன்று திரண்டு போராட வேண்டும்." என்று தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது வழங்கியதை கடுமையாக கண்டித்துள்ளார்.