ராஜஸ்தான் அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல் - கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்
ஐபிஎல் தொடரில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் விலகியுள்ளதால் ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் தொடர் எதிர்பாராதவிதமாக பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நடப்பாண்டு தொடரில் பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். .இதனால் பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமலும், பாதியில் தொடரில் இருந்தும் விலகி வருகின்றனர்.
இந்த தொடரை பொறுத்தவரை ராஜஸ்தான் அணி மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது என்றே சொல்லலாம்.இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இதனிடையே அந்த அணியின் முக்கிய பவுலரான நாதன் கூல்டர் நைல் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்துக் கொண்டிருந்த கூல்டர் நைலுக்கு கடைசி ஓவரில் திடீரென காலில் வலி ஏற்பட்டு அலறி துடித்தார்.
உடனடியாக களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் காயம் குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் கூல்டர் நைல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு பதிலாக மாற்று வீரராக கடந்த 2 போட்டிகளில் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.