தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நட்ராஜ்: அதிர்ச்சியில் ரசிகர்கள் - என்ன காரணம்?
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் நடராஜனின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்ததும் நவம்பர் 17ஆம் தேதி முதல் இந்தியா, நியூசிலாந்து இடையில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஐபிஎல் 14ஆவது சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி, ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா ஆகியோர் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே இந்திய அணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐபிஎல் இரண்டாவது பாதி ஆட்டங்களின்போது முழங்கால் காயத்தால் அவதிப்பட்டார். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். இந்நிலையில் தற்போது சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆனால், அவரால் பழையபடி சரியான பார்மில் பந்துவீச முடியவில்லை. ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை வாரி வழங்கி, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறி வருகிறார்.
இதன்காரணமாகத்தான் அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணி கடைசியாக பஞ்சாப் அணியை எதிர்கொண்டு 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் நடராஜன் 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.