டி20 உலகக் கோப்பை ஒரம் கட்டப்பட்ட நடராஜன் - செலக்ட் செய்யாததற்கு காரணம் என்ன?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பெறாதது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரரான டி. நடராஜன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். 30 வயதான நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின்போதே முழங்காலில் காயம் ஏற்பட்டது.
எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குக் காயம் பெரிதானது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்குக் ஏப்ரல் மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை.
. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்களான அஸ்வினும் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றார்கள். ஆனால் நடராஜன் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஏன் நடராஜன் இடம் பெறவில்லை என்ற கேள்வி இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.
இதுபற்றி தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா கூறியுள்ளதாவது ;
இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஹார்திக் பாண்டியா இருக்க வேண்டும் எனத் தேர்வுக்குழு கருதினோம்.
நடராஜன் பற்றி கண்டிப்பாக விவாதித்தோம். ஆனால் நீண்ட நாளாக எந்தவொரு கிரிக்கெட் ஆட்டத்திலும் நடராஜன் பங்கேற்கவில்லை. காயமடைந்த வீரர்களின் பட்டியலில் அவர் உள்ளார் ,அதனால்தான் நாங்கள் மூத்த பந்துவீச்சாளர்களையே தேர்வு செய்தோம் எனக் கூறியுள்ளார்.