விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணியிலிருந்து நடராஜன் நீக்கம் காரணம் என்ன?
விஜய் ஹசாரே கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழக அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். மேலும், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சையது முஷ்தாக் அலி கோப்பையின் போது அணியை வழிநடத்திய கேப்டன் விஜய் சங்கர், விஜய் ஹசாரே கோப்பையிலும் தமிழக அணிக்குக் கேப்டனாக நீட்டிக்கப்பட்டுள்ளார்.
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர் இரண்டிலும் வாஷிங்டன் சுந்தர் விளையாடவில்லை, சையது முஷ்தாக் அலி தொடரிலும் விளையாடவில்லை.
அதேபோல காயத்தால் தினேஷ் கார்த்திக்கும் சையது முஷ்தாக் அலி கோப்பையில் விளையாடவில்லை. இருவரும் காயத்திலிருந்து குணமடைந்ததால், விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணிக்குத் திரும்பியது மிகப்பெரிய பலமாகும்.
அதேசமயம், காயத்தில் நீண்ட நாட்கள் விளையாடாமல் உள்ள இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பையில் எலைட் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணியுடன் மும்பை, புதுச்சேரி, பரோடா, பெங்கால், கர்நாடக அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பரோடா, புதுச்சேரி அணிகளை தமிழகஅணி எளிதாக வென்றுவிடும், பெங்கால், மும்பை, கர்நாடக அணிகளுக்கு எதிரான ஆட்டம் தமிழக அணிக்கு சவாலாகவே இருக்கும் என விளையாட்டுத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.