நாசாவின் செவ்வாய் கிரகப் பயண திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்திய பெண் விஞ்ஞானி

scope knowledge guidance
By Jon Feb 20, 2021 04:39 AM GMT
Report

அமெரிக்‍காவின் செவ்வாய் கிரகப் பயண திட்டத்தில், பெங்களூரைச் சேர்ந்த இந்திய பெண் சுவாதி முக்‍கிய பங்காற்றியிருக்கிறார். ரோவர் வாகனம், செவ்வாய் கிரக மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்ற தொழில்நுட்பத்தை அவர் உருவாக்‍கியிருக்கிறார். செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்ய, அமெரிக்‍க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை அனுப்பியிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற ஆய்வை இந்த ரோவர் வாகனம் மேற்கொள்ளும். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில், இந்திய பெண் விஞ்ஞானியான சுவாதி மோகன் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார்.

2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாசாவின் இந்த திட்டத்தில், வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக சுவாதி பணியாற்றி இருக்கிறார். மேலும், ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

இந்த சாதனைக்‍காக பல்வேறு தரப்பிலும் அவருக்‍கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. விண்வெளி ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள சுவாதி, நாசாவின், சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.

சுவாதியை பாராட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பாராட்டை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் ஸ்வாதி மோகனுக்கு வாழ்த்துகள்.

இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம்! நாசா ஜே.பி.எல் மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லைகளைக் கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதைக் கண்டு வியப்படைகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.