நரிக்குறவர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரித்த ஆவடி திமுக வேட்பாளர்
ஆவடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சா.மு.நாசர் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர்களோடு அமர்ந்து உண்டிகோல் (சுண்டுவில்) செய்து காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது. சென்னை ஆவடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் க.பாண்டியராஜனும் திமுக சார்பில் சா.மு.நாசரும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் தேதி நெருங்க நெருங்க பிரச்சாரமும் சூடுபிடித்து வருகிறது. திமுக வேட்பாளர் சா.மு.நாசர் திருமுல்லைவாயில் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அவருக்கு நரிக்குறவப் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் அவர்கள் கையிலிருந்த மணி மாலையை வேட்பாளருக்கு அணிவித்தனர்.
பின்னர் அவர்கள் உண்டிகோல் (சுண்டிவில்) செய்வதை பார்த்த நாசர் , அவர்களோடு சேர்ந்து உண்டிகோல் (சுண்டுவில்) செய்து காண்பித்தார்.
பின்னர் உண்டிகோல் மூலம் உயரமான மரத்தில் இருந்த பழத்தை அடித்து அசத்தினார். இந்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது. பின்னர் நரிக்குறவர்களின் அடிப்படை கோரிக்கைகளை விரைவில் அமையவுள்ள திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.