முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு - முதலமைச்சர் இரங்கல்
தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் காலமானார் நரேஷ் குப்தா
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா(73). இவர் சென்னை அண்ணாநகர் மேற்கு ஆபிசர்ஸ் காலனியில் தனது மகனுடன் வசித்து வந்தார்.
தமிழக தேர்தல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற நரேஷ் குப்தா கடந்த 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது உறவினர்கள் வந்த பின்னர் நாளை மறுநாள் அண்ணாநகரில் உள்ள இடுகாட்டில் அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இரங்கல்
இதனிடையே நரேஷ் குப்தா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"முன்னாள் தலைமை தேர்தல் அலுவலரும் காந்திய பற்றாளருமான நரேஷ் குப்தா ஐஏஎஸ் (ஓய்வு) அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
உள்துறைச் செயலாளர், மாநில திட்டக் குழுவின் உறுப்பினர்- செயலாளர் என பல உயர் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக விளங்கியவர் நரேஷ் குப்தா அவர்கள்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், நரேஷ் குப்தா மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.