பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா பயணம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று 2 நாட்கள் சுற்றுப் பயணமாக கேரளா செல்கிறார். இதனையொட்டி கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கேரள பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று 2 நாட்கள் சுற்றுப் பயணமாக கேரளா செல்கிறார்.
இன்று மாலை கேரளா மாநிலம், கொச்சிக்கு வருகை தரும் நரேந்திர மோடி கொச்சி மெட்ரோ ரயிலின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ள, பேட்டா முதல் எஸ்என் சந்திப்பு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதன் பின்பு, நரேந்திர மோடி கேரள ஆதிசங்கரர் அவதரித்த காலடி கிராமத்திற்கு செல்கிறார். நாளை கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட, விமானம் தாங்கி போர்க் கப்பலான, ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மங்களூர் பயணம்
இதனையடுத்து நாளை மதியம் கர்நாடகா மாநிலம் மங்களூரு செல்கிறார். அந்த மாநிலத்தில் 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க உள்ளார். கேரளாவில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.