துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஷின்சோ அபே இறுதி மரியாதை நிகழ்ச்சி - பிரதமர் மோடி பங்கேற்பு?
துப்பாக்கிச் சூட்டியில் உயிரிழந்த ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி மரியாதை நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் மோடி பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு
கடந்த ஜூலை 8ம் தேதி, 67 வயதான ஷின்சோ அபே நடைபெற இருந்த ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதற்காக அன்று ஷின்சோ அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் 2 குண்டுகள் துளைத்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷின்சோ அபே உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி இரங்கல்
ஷின்சோ அபேயின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஷின்ஷோ அபேவின் மறைவையொட்டி இந்தியாவில் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

பிரதமர் மோடி விருப்பம்
இந்நிலையில், வரும் செப்டம்பர் 27ம் தேதி ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி மரியாதை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.