நரேந்திர மோடியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இராக் சர்வாதிகாரி சதாம் ஹுசேன், லிபியா சர்வாதிகாரி ஆகியோருடன் ஒப்பிடும் வகையில் பேசி உள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரெளன் பல்கலைக்கழக பேராசிரியர் அஷுதோஷ் மற்றும் மாணவர்களுடன் ராகுல் காந்தி நேற்று காணொளி மூலம் பேசினார்.
அப்போது அந்த காணொலி வாயிலாக ராகுல் காந்தி பேசியதாவது - "சதாம் ஹுசேன், கடாஃபி காலத்தில் கூட தேர்தல்கள் நடைபெற்றன. அவர்களும் அதில் வெற்றி பெற்றார்கள். அப்போது யாரும் ஓட்டு போடவில்லை என அர்த்தமில்லை. ஆனால், ஓட்டை பாதுகாக்கும் சரியான அமைப்பு முறை அங்கு இல்லை. "ஒரு தேர்தல் என்பது மக்கள் வெறும் பொத்தானை அழுத்தி வாக்கு பதிவு செய்வதற்கானது அல்ல.
அது ஒரு விரிவான கதை. ஒரு நாடு சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான அமைப்புகள் தொடர்புடையது. நீதித்துறை சுதந்திரமாக இருப்பது பற்றியது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுவது பற்றியது. ஓட்டு போட இவை எல்லாம் அவசியம் என்று அந்த காணொலி வாயிலாக ராகுல் காந்தி பேசினார். இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி.
Live: My interaction with Prof Ashutosh Varshney, faculty & students of Brown University. https://t.co/1goKjIgp9H
— Rahul Gandhi (@RahulGandhi) March 16, 2021
சில நாட்களுக்கு முன்பு ஸ்வீடனைச் சேர்ந்த வி-டெம் என்ற நிறுவனம், 2014-ஆம் ஆண்டில் இந்திய பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றது முதல் ஜனநாயக சுதந்திரங்கள் வீழ்ச்சியடைந்து வருவதாக கூறியது. அமெரிக்காவின் நிதியுதவி பெற்று செயல்படும் ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அரசு சாரா அமைப்பின் சர்வதேச அறிக்கையில் இந்தியாவின் நிலையை சுதந்திரமான நாடு என்பதில் இருந்து பகுதியளவு சுதந்திரமான நாடு என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில், 2014ல் மோதி பிரதமரானது முதல் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் பலவீனமடைந்து வருவதாக கூறப்பட்டிருக்கிறது.

அந்த அமைப்பின் அறிக்கையை முற்றிலுமாக இந்திய அரசு நிராகரித்தது. இது தவறாக வழிநடத்தக்கூடிய சரிபார்க்கப்படாத, தவறாக பொருள் பொருந்தும் வகையிலான கருத்துகள் என தெரிவித்திருக்கிறது.
இந்த அறிக்கையின் சில அம்சங்களை நேற்றைய கூட்டத்தின்போது சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவின் சூழ்நிலை மோசமாகியிருக்கிறது. அதை நான் தான் சொல்லித்தெரிய வேண்டும் என்பதில்லை என்று பேசினார்.