“உன்ன துாக்கிவிடுவேன்” ரயிலில் சென்றவரை மிரட்டிய பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி

Communist Party Of India Tamil nadu BJP Narendra Modi
By Thahir Feb 24, 2023 03:45 AM GMT
Report

ரயிலில் மோடி குறித்து பேசிய பயணியுடன் பாஜக நிர்வாகி போலீசாரை வரவழைத்து மிரட்டிய சம்பவம் சக பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.

பயணியிடம் கடும் வாக்குவாதம் 

தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, நேற்று முன்தினம் காலை சென்னையிலிருந்து கோவைக்கு சதாப்தி விரைவு ரயிலில் பயணம் செய்தார்.

அதே ரயிலில், சென்னை ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் என்பவர் பயணம் செய்துள்ளார்.

அப்போது பிரதமர் மோடி குறித்து பாஜவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி பெருமையாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த சக பயணி ஒருவர் பிரதமர் நாட்டை விற்றுவிட்டார் என்று என எதிர் கருத்தை எடுத்துரைத்துள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாத நாராயணன் திருப்பதி பொது இடத்தில் பிரதமரை இழிவுபடுத்திவிட்டார் எனவும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் துாக்கிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

Narayanan Thirupathi who threatened the passenger

இதை கேட்டுக் கொண்டிருந்த சாமுவேல்ராஜ் பயணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து பேசியுள்ளார். இதனால் நாராயணன் திருப்பதிக்கும் சாமுவேல்ராஜ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வந்த ரயில்வே போலீசார் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளனர்.

பாலகிருஷ்ணன் கண்டனம்  

இந்த நிலையில் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில்வே காவல்துறையிடம் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளது.

Narayanan Thirupathi who threatened the passenger

இது குறித்து மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “தூக்கிவிடுவேன், நான் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்” என்றெல்லாம் தொடர்ச்சியாக மிரட்டியிருக்கிறார்.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் நாராயணன் திருப்பதியை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வதற்கு பதிலாக ஆளும் கட்சி என்ற அதிகாரத்தையும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பையும் தவறாக பயன்படுத்தி காவல்துறையை ஏவி விட்டு கே. சாமுவேல்ராஜை ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

பாஜகவுக்கு அஞ்சி ரயில்வே போலீஸ் நடந்து கொண்ட விதம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். பொதுவாழ்க்கையில் இருக்கிற யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல ; கருத்து சுதந்திரம், அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள உரிமையாகும்.

சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தனமாகவும் மாறுவதை அனுமதிக்கவே கூடாது.

இந்நிலையில் பிரதமரை விமர்சித்தால் காவல்துறையை ஏவிவிடுவோம் என்பது பாஜகவின் சகிப்பற்ற தன்மையையும், அதிகார மமதையுமே காட்டுகிறது.

இத்தனையும் செய்துவிட்டு கே.சாமுவேல்ராஜ் பேசியதை வெட்டியும், திரித்தும் வெளியிட்டு அவர் குற்றம் செய்து விட்டதைப் போல பொதுவெளியில் பதிவிடுவதை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது.

தென்னக ரயில்வே காவல்துறை, இச்சம்பவத்தில் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீதும், சக பயணிகளை மிரட்டிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.