திருமணத்துக்கு பிறகு ஏற்பட்ட நட்பு! - மனைவியின் ஆண் நண்பரைக் கொலை செய்த கணவர்.
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் ஊராட்சி பெரியார் நகரில் நவீன அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலம் நபராம்பூரைச் சேர்ந்த ராகுல்(26) என்பவரும், அவருடைய மனைவி பூஜாவும் (24) குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர்.
இதே அரிசி ஆலையில் ஒடிசா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கிருஷ்ணா(28) என்பவரும் வேலை செய்து வந்தார். ஒரே அரிசி ஆலையில் ஒரே மாநிலத்தைச் சோந்த 3 பேரும் வேலை செய்ததால் ராகுலின் மனைவி பூஜாவுக்கும், கிருஷ்ணாவுக்கும் நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அதை ராகுல் தவறாக கருதவில்லை.
ஆனால் இருவரும் பழகிய விதம் ராகுலுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் மனைவி மற்றும் கிருஷ்ணாவை ராகுல் கண்டித்தார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து பழகி வந்தனஇதனால் ஆத்திரம் அடைந்த ராகுல், கத்தியால் கிருஷ்ணாவை குத்திக்கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான ராகுலை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் செங்குன்றம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.