பாஜக தலைவர்களை ஒருமையில் பேசிவருவதாக கூறி நாஞ்சில் சம்பத்தின் கார் முற்றுகை - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை எழுத்தாளர் நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டங்களில் ஒருமையில் தரக்குறைவாக பேசி வந்ததாக கூறி, அவர் வந்த காரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த நாஞ்சில் சம்பதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அந்தோணிராஜ், விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் நாஞ்சில் சம்பத் வந்த காரை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். அப்போது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும் காவல்துறைக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நாஞ்சில் சம்பத் பயணித்த காரின் டயர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மீது உரசி அதில் லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் விருத்தாசலம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மூக்கு கண்ணாடி உடைந்தது, தலைமை காவலர் ஒருவருக்கு இடது காலில் டயர் உரசியதில் லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதுபற்றி பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் மணிகண்டன் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசனிடம் நாஞ்சில் சம்பத் கார் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது மேலும் காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மீதும் அவர் கார் மோதியுள்ளது.
எனவே நாஞ்சில் சம்பத் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என புகார் மனு கொடுத்துள்ளார்.
காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அங்கிருந்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.