கண்டித்த ஆசிரியர்; தீர்த்து கட்ட பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்கள்

Tirunelveli
By Karthikraja Aug 09, 2024 07:12 AM GMT
Report

மாணவர்களை கண்டித்த ஆசிரியரை தீர்த்துக்கட்ட பள்ளிக்கு மாணவர்கள் கத்தியுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் சரியாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளனர். 

nanguneri

மேலும் ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபட்டு வந்ததோடு, தேர்விலும் குறைவான மதிப்பெண்கள் எடுத்த நிலையில் அந்த மாணவர்களை ஆசிரியர் அழைத்து கண்டித்துள்ளார்.

கத்தி

இதனால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட மாணவர்கள் அந்த ஆசிரியரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் தங்களது புத்தகப்பையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.

மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்தது குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் கிடைத்தையடுத்து உடனடியாக மாணவர்களின் பைகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது புத்தகப்பையில் கத்தி மற்றும் கத்தரிக்கோல் ஆகியவற்றை 3 மாணவர்கள் மறைத்து வைத்துக்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

வழக்கு பதிவு

உடனே பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வந்த காவல் துறையினர் 3 மாணவர்களையும் பிடித்து விசாரணை செய்தனர். அதன் பின் ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 

nanguneri police station

ஆசிரியர்களை பழி வாங்கும் நோக்கோடு தீர்த்து கட்டுவதற்காக திட்டமிட்டு கத்தியை கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் மாணவர்களின் இது போன்ற சமூக விரோத செயல்களால் ஆசிரியர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஆசிரியர் வட்டாரங்கள் அச்சமடைந்துள்ளனர்.