நாங்குநேரி விவகாரம்; முதல்வர் அங்கு படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் - அண்ணாமலை ஆவேசம்!
'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணாமலை உரையாற்றியுள்ளார்.
பாதயாத்திரை
பாஜக சார்பில் ஊழலை எதிர்த்து 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தில் தற்போது அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளார்.
நேற்று காந்தி நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்திய பிறகு, களியக்காவிளை சந்திப்பிலிருந்து பாதயாத்திரையை தொடங்கினார் அண்ணாமலை. பேருந்து நிலையம் அருகே தேசிய கொடி ஏற்றி வைத்து சமாதான புறாவை பறக்க விட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றினார் அண்ணாமலை.
அண்ணாமலை பேச்சு
அவர் பேசியதாவது 'நீட் யாருக்கு எதிரானது என்பதை புள்ளி விவரங்களை வெளியிட்டு திமுக விளக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இதனை வைத்து அரசியல் செய்கிறார். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. குழந்தைகளின் அறிவுத்திறனை பொறுத்து என்ன படித்தால் மேன்மை பெற முடியும் என்பதை பார்க்க வேண்டும்.
பெற்றோரின் கனவை குழந்தைகள் மீது திணிப்பது தவறு. வேங்கைவயல் மற்றும் நாங்குநேரி விவகாரத்தில் பல கட்சியினர் மவுன விரதத்தில் உள்ளனர். சாதிய வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். திமுக அமைச்சர்களே பல இடங்களில் சாதி வன்மத்தை கடைபிடிக்கின்றனர். நாங்குநேரியில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் வீட்டில் இருந்து முதல்வர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கைது செய்தபோது, காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிகோட்டில் கர்ப்பிணி பெண், குழந்தை உட்பட 9 பேரை பேருந்தில் உயிரோடு கொளுத்தினார்கள். இன்றைக்கு நாடெல்லாம் பிரிவினைவாதத்தை வளர்த்து கொண்டிருக்கின்றனர் என்று பேசியுள்ளார் அண்ணாமலை.