திருப்பம் மேல் திருப்பம் - 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது நமீபியா
டி20 உலக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முதற்சுற்று லீக் ஆட்டம் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் ஒடொவுட் 70, கோலின் அகெர்மேன் 35 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணியில் டேவிட் வெய்ஸ் 66 ரன்கள் குவிக்க 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அந்த அணி வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரில் கத்துக்குட்டி அணிகளாக கருதப்படுபவை தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.