நாடே போற்ற வேண்டிய நம்பி நாராயணனை மறந்தது ஏன்? - யார் இவர்? - சிறப்புப் பார்வை
நடிகர் மாதவன்
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் மாதவன், சில கதைகள் பத்தி நீங்க தெரிஞ்சுக்காம இருப்பது நாட்டு மேல அக்கறை இல்லாம இருக்குறதுக்கு சமம். இவருடைய கதைய கேட்டீங்கனா, சாதனைகள பார்த்தீங்கன்னா, உங்களால பேசாம இருக்க முடியாது என்று நடிகர் மாதவன் நம்பி நாராயணை குறிப்பிட்டு பேசினார்.
யார் இந்த நம்பி நாராயணன்? அப்படி என்ன இவர் செய்துவிட்டார்? அலசுவோம்....
வாழ்க்கை வரலாறு
நெல்லை மாவட்டம், வள்ளியூர் அடுத்த திருக்குறுங்குடியில் 1941-ம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில் நம்பி நாராயணன் பிறந்தார். இவருக்கு அடுத்து 5 சகோதரிகள் பிறந்தனர். இவரது தந்தை தேங்காய் நார் வியாபாரம் செய்பவர். நம்பி நாராயணன் பள்ளி படிப்பை முடித்து, மதுரை தியாகராஜர் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பு படித்தார்.
இதனையடுத்து, 1966-ம் ஆண்டு இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார். பணியில் இவர் சிறந்து விளங்கினார். இதனால், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ராக்கெட் உந்து சக்தி முறைகளை பற்றி படிப்பதற்கு உதவித் தொகை கொடுத்தது.
செவ்வாய், சந்திரன் போன்ற கிரகங்களுக்கு ராக்கெட் அனுப்பும் அளவிற்கு இன்று இந்தியா வளர்ந்திருக்கலாம். ஆனால் இதை சாத்தியமாக்க பல விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக பல ஆண்டுகள் உழைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் நம்பி நாராயணன்.
அப்துல் கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக கொண்டு ராக்கெட் செலுத்துவது குறித்து ஆய்வு செய்த போது, திரவ எரிபொருட்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தவர் நம்பி நாராயணன்.
திரவ எரிபொருள் தேவையை முன்கூட்டியே கணித்து 1970-களில் முதல் திரவ உந்து மோட்டாரை உருவாக்கினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சிக்காக இவர் உழைத்ததை போற்றும் வண்ணம் இவருக்கு 2019-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
க்ரையோஜெனிக் தொழில்நுட்பம்
குளிர்விக்கப்பட்ட ஹைட்ரஜனை பயன்படுத்தி அதிக தொலைவிற்கு ராக்கெட்டை அனுப்பும் தொழில்நுட்பம் தான் க்ரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம். 1990ம் ஆண்டில் இந்த க்ரையோஜெனிக் தொழில்நுட்பம் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் மட்டும்தான் இருந்தது.
இந்த க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து ரூ.235 கோடி கொடுத்து வாங்க 1992ம் ஆண்டு இந்தியா மிகவும் முயற்சி செய்தது. ஆனால், அதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டது.
இதனைத்தொடர்ந்து இந்தியா, ரஷியாவிடம் சில ஒப்பந்ததில் திருத்தங்கள் செய்தது. 4 க்ரையோஜெனிக் ராக்கெட்டுகளை இந்தியாவின் கெல்டெக் நிறுவனம் தயாரிக்க உதவுவதாக ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு அந்த ஆண்டே கையெழுத்தானது.
2 வெளிநாட்டு பெண்கள் கைது
இதற்காக இஸ்ரோவிலிருந்து எஸ். நம்பி நாராயணன், டி. சசிகுமரன் ஆகியோர் ரஷ்யாவுக்கு சென்று வரவேண்டி இருந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் இதற்கான ஆய்வுகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டு வந்தது.
இதெல்லாம் நன்றாக நடந்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென கேரள காவல்துறை மாலத்தீவைச் சேர்ந்த 2 உளவாளிகள், மரியம் ரஷீதா மற்றும் பெளஸிய்யா ஹாஸன் என்ற 2 வெளிநாட்டு பெண்கள் திருவனந்தபுரத்தில் கைது செய்தது.
வாக்குமூலம்
அப்போது, அந்த வெளிநாட்டு 2 பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தில், ராக்கெட் வரைப்படங்களை நம்பி நாராயணனும், சசிகுமாரனும் கொடுத்ததாகவும், அவர்கள் வாயிலாக க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ததாகவும் கூறினர்.
இதனையடுத்து, நம்பி நாராயணனும், சசிகுமாரனும் கேரள காவல்துறை கைது செய்தது.
நம்பி நாராயணன் சிறையில் அடைப்பு
இதனையடுத்து, அவரை நீதிமன்றக் காவலில் 11 நாட்கள் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிறையில் மொத்தம் 50 நாட்கள் இருந்தார். விசாரணைக் காலத்தில் பல அவதிகளை அவர் அனுபவித்தார். இதையெல்லாம் அனுபவித்த 53 வயதான நம்பி நாராயணனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மாநில அரசிடமிருந்து இந்த வழக்கு, மத்திய புளனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரனையின் முடிவில் நம்பி நாராயணன் நிரபராதி என உறுதி செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
கேரள அரசு நஷ்ட ஈடு வழங்கியது
பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதால் அவர் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, கடந்த 1999ம் ஆண்டு மனித உரிமை ஆணையம் மூலமாக கேரள அரசிடம் இவர் இழப்பீடு கோரினார். இதனைத்தொடர்ந்து 2001-ம் ஆண்டு கேரள அரசு இவருக்கு 1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்கியது.