வினாத்தாளை இணையத்தில் வெளியிட்ட பெண் - வாழ்நாள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை

tngovernment Teachers Recruitment Board
By Petchi Avudaiappan Dec 09, 2021 11:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாளை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட நாமக்கல் பெண்ணுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில்  உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டு, அதில் முறைகேடுகள், பிரச்சினைகள் நடந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் மற்றும் தேர்வு மையங்களை அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அவ்வாறு தள்ளி வைக்கப்பட்ட தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த தேர்வு நடக்க இருக்கிறது.

கணினி வழியாக நடைபெறும் இந்த தேர்வை 1.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். கொரோனா தொற்றுக்கு மத்தியில் தேர்வு நடைபெற்றதையடுத்து அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தேர்வு மையங்களில் பின்பற்றப்பட்டன.

அந்த வகையில் முதல் நாளான நேற்று முன்தினம் இயற்பியல், பிரிண்டிங் தொழில்நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம், உற்பத்தி என்ஜினீயரிங், உபகரணங்கள் மற்றும் கையாளும் என்ஜினீயரிங், நவீன அலுவலக பயிற்சி ஆகிய 8 பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடந்தது.

இதில் ஆங்கிலம் பாடப்பிரிவு தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேர்வில் முறைகேடு நடந்ததாலேயே தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது இதுபோன்ற தகவல்கள் வெளியாகி இருப்பது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பார்வைக்கு சென்றிருப்பதாகவும், அதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்வு கணினி வழியாகத்தான் நடந்தது என்றும், இதற்கு வினாத்தாள் கையில் வழங்கப்படாது என்றும், சமூக வலைதளங்களில் தேர்வு முடிந்ததற்கு ஒரு வெள்ளைத்தாளில் வினாக்கள் எழுதப்பட்டு வினாத்தாள் வெளியானதாக சொல்லப்படுகிறது என்றும், தேர்வை மீண்டும் ரத்து செய்ய இதுதொடர்பான தவறான தகவல்கள் சில விஷமிகளால் பரப்பப்படுகிறது என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இருந்தாலும் அதுபற்றி தெளிவான விசாரணை நடத்தப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் எனவும், அதுவரை தேர்வர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் தேர்வு முடிந்த பிறகு வினாத்தாளை வெள்ளை காகிதத்தில் எழுதி தேர்வு விதிமுறைகளை மீறி அதை வெளியே கொண்டு வந்து, சமூக வலைதளங்களில் பரப்பியது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பூர்ணிமாதேவி என்ற பெண் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த பெண் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.