கல்லூரி காதலுக்காக கட்டிய மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் - என்ன நடந்தது?
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லூரி காதலுக்காக கட்டிய மனைவியை கொலை செய்து விட்டு காவல்நிலையத்தில் நாடகமாடிய கணவரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிணற்று தெரு பகுதியை சேர்ந்த சபரிநாதன், வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த தரணி தேவி என்பவருக்கு கடந்த ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கணவனின் நடவடிக்கை சரியில்லை என கூறி, தரணி தேவி குழந்தையுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஒரு மாத காலமாக பெற்றோர் வீட்டிலேயே இருக்கும் தரணி தேவியை கடந்த சனிக்கிழமை அன்று சந்தித்த சபரிநாதன் , மனைவியை சமாதானம் செய்து காரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் காரை வழிமறித்து தரணி தேவியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாகவும், இதில் காயமடைந்த தரணி தேவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் கூறினார்கள் என சபரிநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சபரிநாதன் அவரது குழந்தையை மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைத்ததால் போலீசாருக்கு சபரிநாதன் மீது சந்தேகம் எழுந்தது.
இதனை தொடர்ந்து மனைவியின் வீட்டில் மேற்கொண்ட விசாரணையில், சபரிநாதன் கல்லூரி காதலியின் கடிதம் சிக்கியுள்ளது.
சபரிநாதன் கல்லூரி படிக்கும் போதே அவருடன் படித்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து, தனிக்குடும்பமாக வாழ்ந்துவந்துள்ளனர். இதனை தொடர்ந்துதான் சபரிநாதனுக்கு அவரது பெற்றோர் தரணி தேவியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
சிறிது நாட்கள் கழித்து சபரிநாதனினின் கல்லூரி காதலி, தரணி தேவிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில், சபரிநாதனின் முதல் மனைவி நான் என்றும், அவரை நான் மட்டுமே சந்தோஷமாக வைக்கமுடியும், அதனால் நீ வாழ்க்கையை விட்டு விலகி விடு என கூறி, இருவரும் ஜோடியாக இருந்த போட்டோவையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் தரணி தேவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ரேவதி கொடுத்த அழுத்தத்தால், சபரிநாதன் மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தையை மாமானார் வீட்டிலேயே விட்டு விட்டு மனைவியை மட்டும் காரில் அழைத்து சென்ற சபரிநாதன், தரணி தேவியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, அவரின் 7 பவுன் தங்க நகையை கைக்குட்டைக்குள் ஒழித்து வைத்துகொண்டு மனைவியை கொள்ளையர்கள் தாக்கியதாக நாடமாகமாடியுள்ளது அம்பலமானது.
இதனை தொடர்ந்து சபரிநாதனை கைது செய்த போலீசார், குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.