‘காதல்’ பட பாணியில் நாமக்கலில் பயங்கரம் - காதலன் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு மணப்பெண்ணை கடத்திய பெற்றோர்கள்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி-கண்ணம்மாள். இவர்களுக்கு அஜித் குமார் என்ற மகன் உள்ளார்.
இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு மின்சார வாரியத்தில் லேபர் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வருகிறார். அதேபோல், சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன்-முத்துமணி. இந்த தம்பதிக்கு சுஜிதா என்ற மகள் உள்ளார்.
சுஜிதாவும், அஜித்குமாரும் கடந்த 2 வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால், வீட்டை விட்டு ஓட முடிவு செய்த காதலர்கள் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பிறகு, நேராக நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு இருவரும் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு போலீசார் இரு வீட்டாரரையும் சமாதானப்படுத்தி, கடிதம் மூலம் எழுதி வாங்கி அஜீத் குமாருடன் சுஜிதாவை அனுப்பிவைத்தனர்.
ஆனால், சுஜிதாவின் பெற்றோர் அஜித்குமாரை செல்போன் மூலம் மிரட்டியுள்ளனர். பயந்து போன தம்பதி மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
அப்போது, போகும் வழியில் ஒரு பெரிய கும்பல் அங்கு வந்து காரை தடுத்து நிறுத்தினர். பின்னர், கற்கள் மற்றும் கட்டைகளால் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
காருக்குள் இருந்த அஜித்குமாரையும், சுஜிதாவையும் வெளியே இழுத்தனர். சுஜிதாவின் கழுத்தில் இருந்த தாலியை பெண் வீட்டார் அறுத்து எரிந்து விட்டு சுஜிதாவை வேறு காரில் கடத்தி கொண்டு சென்றுவிட்டனர்.
அந்த கும்பல் அஜித்குமாரையும், அவரது உறவினர்களையும் சராமரியாக தாக்கியது. இந்த தாக்குதலில் அஜித்குமார், அவரது தாய்மாமன் ரவி, சித்தி விஜயா உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
இதனையடுத்து அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்று விட்டனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்தனர்.
அப்போது, அஜித்குமார் கூறுகையில், என் பெற்றோர், உறவினர்களை தாக்கி விட்டு, என் மனைவி கழுத்தில் நான் கட்டிய தாலியை அறுத்து எறிந்துவிட்டு சுஜிதாவை கடத்திச் சென்றுவிட்டனர். என் மனைவியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக, மணப்பெண்ணின் தந்தை உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.