நாமக்கல்லில் சுமார் 23 ஆண்டு காலம் சேவை செய்த கோவில் குதிரை மரணம்
நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அருகே இருக்கக்கூடிய லத்துவாடி பகுதியில் உக்கிராண்டி அம்மன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் உள்ள குதிரை சுமார் 23 ஆண்டு காலமாக பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது அந்த குதிரை வயது மூப்பு காரணமாக சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.இருந்தாலும் சிகிச்சை பலனின்றி தற்பொழுது அந்த குதிரை மரணம் அடைந்திருக்கிறது.

இதை அடுத்து குதிரையை கோவில் வளாகத்திற்கு கொண்டு வந்து வைத்து அந்த குதிரைக்கு இறைவனுக்கு செய்வதை போலவே பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்து ஊர் மக்கள் சார்பில் மரியாதைகள் மற்றும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் புனித வஸ்திரங்கள் அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலுக்கு பக்கத்தில் உள்ள காட்டில் புதைத்திருக்கிறார்கள்.
முன்னதாக குதிரைக்கு மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு பெண்கள் அவர்களுடைய வீட்டில் ஒருவர் இறந்ததைப் போன்று மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு குதிரையை வலம் வந்து கதறி அழுதனர். ஆண்கள் குதிரையின் தலைக்கு எண்ணெய், சீகைக்காய் வைத்து புனித நீராட்டினர்.

18 கிராமங்களுக்கு கோவிலான உக்கிராண்டி அம்மன் கோவில் குதிரை இறந்தது அந்த பகுதி மக்கள் மிகவும் சோகம் அடைந்திருக்கிறார்கள். மேற்கண்ட நிகழ்வுகளை முன் நின்று நடத்திய தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு சொல்வதாவது.
குதிரை வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி புரட்டாசி திருவோண நட்சத்திர நாளன்று மரணம் அடைந்திருக்கிறது. அதனால், இறைவனுக்கு செய்வதை போலவே எல்லா அபிஷேகங்கள் ஆராதனையும் குதிரைக்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது என்று அவர் வருத்துடன் கூறுகிறார்.