அடிபம்புடன் சேர்த்து போடப்பட்ட விநோத தார் சாலை - டென்ஷன் ஆன பொதுமக்கள்
நாமக்கலில் அடிபம்பை அகற்றாமலேயே நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில், 8வது வார்டு பகுதியில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகே ராசிபுரம் - புதுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் அடிபம்பு உள்ளது.இதனை இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக அடிபம்பு செயல்படாமல் இருந்து வந்த நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட நகராட்சிகளின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது புரிய தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி 8வது வார்டில் உள்ள அடிபம்பை அகற்றாமலும் அதனை சரிசெய்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தாமலும் அப்படியே தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் தார் சாலையில் பாதி புதைந்த நிலையில் அடிபம்பு காட்சியளிக்கிறது. தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்காக அடிபம்பை சரிசெய்யாமல் அப்படியே தார் சாலை அமைத்தது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அலட்சியமாக சாலை அமைத்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.