இன்னமும் பயிற்சி வேண்டுமோ? வீணாய் போன ராஜதந்திரம்.. விரக்தியில் திருடன்!
ஏடிஎம்-ல் திருட முயன்ற நபர் இயந்திரத்துக்குள் வசமாக சிக்கி வெளியே வர முடியாமல் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்டம் அணியாபுரத்தில் நடந்துள்ளது.
நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் இந்தியா ஒன் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு அப்பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஏடிஎம் அறையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது.
இதனால் வாகனத்தை நிறுத்திவிட்டு உடனே அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது நபர் ஒருவர் ஏடிஎம்-ல் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதற்காக இயந்திரத்தின் பின்பக்கத்தை உடைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
போலீசார் உள்ளே சென்றதும், பொறியில் சிக்கிய எலி போல தலையை வெளியே நீட்டியுள்ளார். அங்கிருந்து ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் முழிக்க இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார், அவனை வெளியில் வர சொல்லி எச்சரித்தார்கள்.
ஆனால், வசமாக உடல் மாட்டிக்கொண்டதால் வெளியே வர முடியாமல் இயந்திரத்திற்கு உள்ளேயே சிக்கிக் கொண்டான். பின்னர் அதில் இருந்து அந்த கொள்ளையனை வெளியே கொண்டு வந்த போலிஸார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர ராய் என்பது தெரியவந்துள்ளது. மோகனூர் அருகே பரளியில் உள்ள தனியார் கோழி தீவின ஆலையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவு வேளையில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றுள்ளார். இதனை அடுத்து உபேந்திர ராய் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்