ஆளுநரை நீக்க கையெழுத்து இயக்கம் : முதல் நபராக கையெழுத்திட்ட நல்லகண்ணு.
ஆளுநர் ரவியை நீக்க கோரி மதிமுக துவங்கிய கையெழுத்து இயக்கத்தில் முதல் நபராக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கையெழுத்திட்டுள்ளார்.
கையெழுத்து இயக்கம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தில் முதல் ஆளாக நல்லகண்ணு கையெழுத்திட்டார்.
நல்லகண்ணு கருத்து
அதன் பின்னர் அவர் பேசும் போது, ஆளுநர் பொறுப்பை வைத்துக்கொண்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுகிறார். மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தனிமனித ஆதிக்கம் செய்து அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வைகோ கையெழுத்து இயக்கம் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக முதல் ஆளாக கையெழுத்து போடுவதில் நான் பெருமை கொள்கிறேன் என்று நல்லகண்ணு பேசினார்.