‘’என்னோட கடைசி காலம் நளினியோட வாழணும் ‘’ - முதலமைச்சருக்கு நளினி தாயார் கண்ணீர் கோரிக்கை

request cmmkstalin nalinimother
By Irumporai Dec 22, 2021 09:02 AM GMT
Report

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஏழு பேர்களில் ஒருவர் நளினி. எழுவரை விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க தகுதியானவர் என கூறி, ஆளுநர் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார்.

அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும். உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கேட்டு கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாயார் பத்மாவின் கோரிக்கை வைத்தார்

பத்மாவின் மனு அரசின் பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சூழலில் பத்மா முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்துள்ளார்.

அதில், "வயது மூப்பின் காரணமாக உடல் மற்றும் உளவியல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறேன். என் இறுதி காலத்திலாவது மகள் நளினி என்னுடன் வாழ ஏங்குகிறேன்.

நளினி, 31 ஆண்டுகள் சிறைவாசத்தால் மன அழுத்தம், உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். எனவே மனிதநேய அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்க வேண்டும். 7 பேர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அறிந்தேன்.

அதன்படி ஆளுநரிடம் தாங்கள் நினைவூட்டி விடுதலைக்கு ஆவன செய்ய கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடுள்ளார்.