வார்த்தையை விட்ட நயினார் நாகேந்திரன் - சண்டைக்கு சென்ற அதிமுகவினர்

admk அதிமுக பாஜக நயினார்நாகேந்திரன் nainarnagenthiran
By Petchi Avudaiappan Jan 25, 2022 10:14 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசும் அதிமுகவை பார்க்க முடியவில்லை என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக  தமிழக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பொது செயலாளர் கருநாகராஜன், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், நடிகர் செந்தில், நடிகை காயத்ரி ரகுராம் உட்பட பலரும் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச அதிமுகவில் ஒருவரும் இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எதிர்கட்சியாக இல்லையென்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டிக்கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்தவரும் இதற்கு முன்பு அதிமுகவில் இருந்தவருமான நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சைக்  கேட்ட அதிமுகவினர் கொந்தளித்து விட்டனர். சமூக வலைத்தளங்களில் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இதனிடையே தனது பேச்சு தொடர்பாக நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ”இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்” என தெரிவித்துள்ளார்.